Blogger இயக்குவது.

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் அவசர கவனத்திற்கு... விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?

By 10:30 AM






சமையலறையில் இந்தியப் பெண்கள் வெகு அனாயசமாக வெடிகுண்டை கையாள்கிறார்கள்’. இப்படிக் குறிப்பிட்டிருந்தார் மூத்த சமூக சேவகி ஒருவர். அவர் குறிப்பிட்டது சமையல் எரிவாயு சிலிண்டரை! அதை யாராலும் மறுக்கவும் முடியாது. சமையலுக்குப் பயன்படும் அந்த எரிபொருள், சில நேரங்களில் பலரின் உயிரையும் பலி வாங்கிவிடுகிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்தது அந்தச் சம்பவம். எரிவாயு சிலிண்டர் வெடித்த நிகழ்வில் தண்டையார்பேட்டையில் வசித்து வந்த கணவன், மனைவி இருவருமே இறந்து போனார்கள்.

இது நடந்து இரண்டே நாட்கள் கழித்து, ஆந்திராவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் அதே போன்ற விபத்து… எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரரும் அவர் மனைவியும் இறந்து போனார்கள். இப்படித் தொடர்கிற கேஸ் சிலிண்டர் விபத்துகள் நம்மைக் கலங்க வைக்கின்றன.

சமையலுக்குப் பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு என்ன காரணம், அதைத் தவிர்க்க முடியுமா, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இவையெல்லாம் சமையலறையில் புழங்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.

உலகின் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சியமே!பெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற்சிகளையோ அதைப் பராமரிப்பதில்காட்டுவதில்லை.

கேஸ் சிலிண்டருக்கான புது கனெக்‌ஷனைப் பெறும்போதே அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவேண்டும் போன்ற விஷயங்களைக் கற்றுத்தருவார்கள். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்…எந்த பிரச்னையும் வராது’’ என்கிறார் சந்திரன்.

சிலிண்டர் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?...

‘‘தினமும் தூங்கப் போவதற்கு முன்னால் ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும். நிறையபேர் அதைப் பின்பற்றுவதில்லை. ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன் (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும். அதுதான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது.

சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவிவிடும். சின்ன தீப்பொறி ஏற்பட்டாலோ, எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.

சிலர் அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அந்த இடைவெளியில் பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். திரும்ப அடுக்களைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள்.

ஆனால், சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி, வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். எனவே, அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சில வீடுகளில் கிச்சனோடு பூஜையறையும் சேர்ந்தே இருக்கும். விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கிச்சனிலேயே ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக்ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும். எனவே, கிச்சனில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மாடுலர்கிச்சன் என்ற பெயரில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்துவிடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விடும். எந்த மாடல் கிச்சனாக இருந்தாலும் சிலிண்டரை வெளியில், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

சிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால், அது கவனத்துக்கு வராமலே போய்விடும். இப்படி லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

முன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தினோம். இப்போது லைட்டர் கருவி வந்து விட்டது. இது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.உண்மையை சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து ‘டக்டக்’ என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி, கவனிக்காமல் விட்டுவிட்டால் குப்பென உடலிலேயே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. அடுப்பை ஆன் செய்த அடுத்த சில விநாடிகளுக்குள் நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்’’.

You Might Also Like

0 கருத்துகள்

கருத்துக்களை பதிந்திடுங்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

Instagram

Press

Facebook

Post AD

recent posts

Pinterest

Facebook

Popular Posts